Tuesday, January 4, 2011

76 - saaral ean? eeram

காதல் ஏன் அது ஏன் 
என் கனவைத் தின்கிறது? 
சாதல் ஏன் அது ஏன் 
என் கண்ணில் தெரிகிறது. 

முன்னெல்லாம் என் மீது அன்பாய்.. 
இன்றெல்லாம் என் மீது அம்பாய். 

உன்னால்தான் உன்னால்தான் 
என் காயம் ஆறி வந்தது.. 
முள்ளாக மாறி நின்றதேனடா..

தனியே தனியே என்னை 
தனித்தீவாய் மாற்றாதே.
இனியும் இனியும்
இதயம் இயலாதே.

ஒருநாள் ஒருநாள் என்னில்
விதையாக விழுந்தாயே.. 
மறுநாள் விதையை 
கேட்டு வந்தாயே 
.

Tuesday, September 14, 2010

75.மரணம் தருகிற விடுதலை


உலகில் உள்ள வலிகள் 
எல்லாம் மனதை தாக்குதே... 
உளிகள் கொத்திய கல்லாய் 
இதயம் மண்ணில் சாயுதே..

காதல் ஏந்திய  இந்தக் கைகளில் 
காயம் மாற்றி தந்ததேனடா.. 
புனிதம் என்று எதுவும் இல்லை..
மனிதம் கொண்டால் வலியும் இல்லை.. 

காரணம் சொல்லி காதலை அள்ளி 
எறியத் துணிந்ததேன்? 
மரணம் தருகிற விடுதலை எண்ணி 
பற்ற துடிக்கிறேன்.. 

ஒருநாள் உனக்கு புரியும் போதிலே 
ஆறுதல் சொல்ல என் பாடல் இருக்குமே
இப்போதெனக்குள் வழியும் துயரம் 
தாங்கிட இங்கு என் பாடலே உண்டு..   

உயிரை மாய்த்துக் கொண்டால் 
ஒருநாள் துயரமே.
உன்னை மாற்றி கொண்டால் 
என் வாழ்நாள் நீளுமே 


Monday, September 13, 2010

74.வெள்ளைப்பொய்


குழந்தைப் போல அழுகிறேனே
எந்தன் பேச்சை மீறயிலே.. 
குழந்தைப் போல சிரிக்கிறேனே
எந்தன் பேச்சைக் கேட்கையிலே


அடங்காமல் திரிந்தேனே
உன் காதல் என்னைத் தொட்டதும்..
மிதக்காமல் மிதந்தேனே
ஒரு வார்த்தை என்னைக் கேட்டதும்.. 


உலகம் யாவும் மாறுதே
உயிரில் மின்னல் ஓடுதே
என் கண்ணில் உன்னை ஊற்றிக் 
கொண்டு உறங்கச் சென்றேனே..


அன்பே என் ஆசையெல்லாம் 
உன்னோடு வாழத்தானே..
அது மட்டும் போதும் போதும் 
ஆயுளும் கூடும் கூடும்..


என்னைப் போல் உன்னை யாரும் 
நெஞ்சுக்குள் தைத்ததில்லை..
நீ மட்டும் அருகில் வந்தால்
நெஞ்சுக்குள் பூக்கள் பூக்கும்.. 


உன்னோடு நான் என்னோடு நீ
இரவுகள் தீரக் கூடுமோ?
கண்ணே உனை காணாமல் தவித்தேனே
பேச்சுக்களும் ஏச்சுக்களும்
எப்போதும் மாறக் கூடுமோ
என் ஜீவனே உன்னைப் பிரியாதே..


காலங்கள் ஓடுதே.. காயங்கள் கூடுதே
கடற்கரை மணலுந்தன் காலடியைத் தேடுதே.. 


அழகாகச் சிரித்துச் சென்றாய்
அடிநெஞ்சில் கீறிக் கொன்றாய்
ஏனென்று கேட்டால் மட்டும்
ஏதும் சொல்ல மறுக்கிறாய்
இரவெல்லாம் பேசிக் கொண்டாய்.. 
கனவெல்லாம் நீயாய் வந்தாய்..
காரணம் கேட்டு விட்டால்
காணாமலே போகிறாய்.. 


பேச விட்டு நீ சிரிப்பதும்
ஏசி விட்டு நான் முறைப்பதும்
பிடித்ததே பிடித்ததே உனக்கு
கொஞ்சி கொஞ்சி நான் குழைவதும்
நேசம் கொண்டு நான் அலைவதும்
பிடித்ததே பிடித்ததே உனக்கு
உன்னிலும் என்னிலும்
உள்ளுக்குள் உறங்கிடும்
காதலும் வெளி வரும் 
நாளை எதிர்பார்க்கிறேன்


நீ சொல்லும் வெள்ளைப்பொய்யால்
நம் நேசம் மாறாதன்பே 
நான் சொல்லும் வார்த்தையெல்லாம் 
பொய்யாகப் போகாதன்பே


எண்ணம் போல் வாழ்வென்று 
முன்னோர்கள் சொன்னதுண்டு
நீயே என் வாழ்வென்று 
காதல் வந்து சொன்னதின்று..

Sunday, September 12, 2010

73.உன்னோடு


மழையைப் போல வீழ்கிறேனே 
உந்தன் மூச்சு தீண்டிடவே..
அலையைப் போல வாழ்கிறேனே
உந்தன் பேச்சு இனித்திடவே..
யாரோடு யாரிங்கு 
சேர்ந்திடக் கூடுமோ
வேரோடு நீர் வந்தால் 
வேண்டாமென்று சொல்லுமோ

விண்ணேகினால் மண்மேவினால்
எங்கும் உந்தன் பிம்பம்
உண்ணாமலே உறங்காமலே
ஏங்கும் எந்தன் நாளும்
ஆமென்று சொல்லிட ஆண்டுகள் வாழுமே
தேமென்று நின்றிட தேகம் மண்ணில் வீழுமே..

உன்னோடுதான் என்னோடுதான் 
கண்ணாமூசி ஆடும்
காதோடுதான் கண்ணோடுதான்
ரகசியம் யாவும் பேசும். 
நில்லென்று சொல்லியும்
நிற்காமல் ஓடுதே 
தள்ளென்று கூறினால் 
தள்ளிவிட்டு தேடுதே.

Wednesday, August 25, 2010

72.நீ சரிதான் என்பாயா?




அன்பே உனைக் கனவில்
கண்டேனே உயிராக
அழகே உனை கண்ணில்
கொண்டேனே கரு மணியாக
அறிவே உனை கவிதை செய்தேனே
ஒரு சொல்லாலே
அடடா எனை மறந்தே போனேனே
உன் நினைவாலே

அளவோடு நீ பேசிய போதும் 
அடங்காமல் நான் ஏசிய போதும்
பூவாக நீ வீசியதாலே புதிதாய் பிறந்தேனே

ஒரு வார்த்தை சொன்னால் போதும் 
என் வாழ்க்கை தேனாய் மாறும்
குழந்தை போல் உன்னைத் தாங்கி 
இன்பம் தருவேனே

காயம் கொள்கிற போது உன் 
கண்கள் தீண்டிட வேண்டும்
காயம் என்பது மாயமாகுமே உன் 
கைகள் சேர்த்திட்டால் போதும்

இமயம் தொடுகிற போதும் உன்
மையம் தன்னிலே இருப்பேன்
உன்னை நீங்கி நான் என்ன செய்துதான்
ஆவதென்ன என்னெஞ்சே

உன்னோடு வாழ்கின்ற நொடிதோறும் ஆனந்தம்
நீயின்றி நடக்கின்ற அடிகூட பூகம்பம்
கண்ணே என் கண்ணே 
நீ என்னில் உறைவாயா? 

நேரில் பார்க்கிற போது என் 
கண்கள் மலருதே பாரு
இந்த நேரத்தில் இவரைச் சந்தியென
சொல்லிச் சென்றது யாரு? 
உன்னை மட்டுமே எண்ணி 
காதல் வளருதே என்னில் 
யாரென்ன தான் சொன்ன போதிலும் 
திரும்ப மறுக்கிறேன் அன்பே

பூவோடு சேர்கின்ற நாரிங்கு மணக்காதா? 
உன்னோடு வாழ்கின்ற காலம்தான் வாய்க்காதா?
கண்ணே என் கண்ணே 
என் கண்ணீர் துடைப்பாயா? 

காதல் என்பது வேறு 
நட்பு என்பது வேறு 
நட்பு காதலாய் மாறக் கூடுமே
காதல் மாறுமா நட்பாய்? 
காதல் நட்பிலே வாழும் நம்
காலம் முழுமையும் நிலைக்கும் 
நட்பில் காதல்தான் வாழக் கூடுமா? 
அது நம் வாழ்வில் தகுமா? 

அடிநெஞ்சில் சேமிக்கும் என் காதல் எல்லாமே 
நீ வந்து செலவாக்கும் வரம் வேண்டும் என் அன்பே
பொடியா நான் சொன்னால் 
நீ சரிதான் என்பாயா? 

Thursday, July 22, 2010

71.விழியே விளக்காகும்


கனவினில் கனவினில் நுழைந்து விட்டாய்
கவிதைகள் வாசித்து எழுப்பி விட்டாய்
விலகிட விலகிட அருகில் வந்தாய்
பழகிட பழகிட அழகைத் தந்தாய்

முதல் நாளில் உன் பார்வைக்குள்
ஒரு பதியம் செய்திட்டாய்
மறுநாளில் உன் வார்த்தைக்குள்
ஒரு வசியம் வைத்திட்டாய்

இரவினில் தினம் பேசுகிறாய்
இமைகளை நினறு வாசிக்கிறாய்
இதயத்தில் அனல் வீசுகிறாய்
இருந்துமே உண்மை மறைத்துக் கொன்றாய்

ஏனடா அட ஏனடா
உருகுதே என் உயிரடா
ஒரு வார்த்தை சொன்னால்
எந்தன் வாழ்வு இன்னும் நீளாதோ
மறு வார்த்தை பேசாமல் சென்றால்
என்னை மரணம் தீண்டாதோ

காலையில் நான் எழும் போது
ஒரு முத்தம் நீ தருவாயோ
மாலையில் வீடு திரும்புகையில்
மறைந்தே கட்டிக் கொள்வாயோ

ஆயிரம் என் ஆசைகள்
ஆயினும் சொல்ல மறுக்கிறேன்
உண்மை சொல்லாத போதும் எந்தன்
உயிரும் உனக்காகும்..
இருளும் சூழ்கின்ற போது உந்தன்
விழியே விளக்காகும்.

Saturday, July 17, 2010

70.ஐந்திணை


கைக்கிளையா? பெருந்திணையா?
இரண்டும் இல்லா ஐந்திணையே..
ஐந்திணையா அதில் எத்திணையோ?

கடலும் கடலைச் சார்ந்த இடமும்
நெய்தல் என்று தெரியாதவனா?
தெரிந்தும் எதற்கிந்த
கேள்விகள் கண்ணா..?
புரிந்தும் புரியா
நடிப்பெல்லாம் ஏனோ?
ஏனோ? ஏனோ?

முன் ஜென்மத்தில் ஒரு மீனவப்
பெண்ணாய் நானும் வந்து பிறந்திருந்தேன்
ஒரு அலை வந்து என்னைக் கடத்திட
படகில் நீதான் கரை சேர்த்தாய்
அன்றுடன் உன்னில் நான்
கலந்துவிட்டேன்
இரவெல்லாம் கனவினில்
திளைத்திருந்தேன்
ஒருநாள் மரணம் எனைத் தீண்டவே

பிரிந்து விட்டேன் பிரிந்து விட்டேன்
என்று நீயும் நினைத்திருந்தாய்
பிறந்து விட்டேன் பிறந்து விட்டேன்
நீயேன் நம்ப மறுக்கின்றாய்?

வயலும் வயலைச் சார்ந்த இடமும்
மருதம் என்று தெரியாதவனா?
தெரிந்தும் எதற்கிந்த
தனிமை அன்பே..
துணிந்து வந்தென்னை
கரம்பிடி இன்றே..
இன்றே இன்றே..

முன் ஜென்மத்தில் மருதத் தலைவனின்
மகளாய் நானும் பிறந்திருந்தேன்
ஒரு அறுவடை நிகழ்ந்த நாளொன்றில்
கருக்கருவால் பட்டு நான் துடித்தேன்
மனதில் உனைத் தாங்கி நான் சரிய
மடியில் என்னை நீயேந்திக் கொண்டாய்
இருந்தும் கண் மூடினேன்..

இறந்து விட்டேன் இறந்து விட்டேன்
என்று நீயும் நினைத்திருந்தாய்..
இணைந்திடவே பிறந்து விட்டேன்
அதையேன் நம்ப மறுக்கின்றாய்.?

காடும் காட்டைச் சார்ந்த இடமும்
முல்லை என்று தெரியாதவனா?
தெரிந்தும் எதற்கிந்த
மௌனம் அழகே.?
மௌனம் விட்டு
மொழி சொல்லு அழகே..
அழகே அழகே..

முன் ஜென்மத்தில் இந்த காட்டினுள் ஒரு
முல்லைக் கொடியாய் பூத்திருந்தேன்..
ஒரு மரமென நீ அணைத்திட்டாய்
உன்மேல் நானும் படர்ந்திருந்தேன்..
விறகு வெட்டி உனை வெட்ட
என் உடலால் நானும் தடுத்து
சோர்ந்தே நான் சரிந்தேனே..

மரித்துவிட்டேன் மரித்துவிட்டேன்
என்றே நீயும் நினைத்திருந்தாய்
மலர்ந்து விட்டேன் மலர்ந்து விட்டேன்
அதையேன் நம்ப மறுக்கின்றாய்?

மணலும் மணலைச் சார்ந்த இடமும்
பாலை என்று அறியாதவனா?
அறிந்தும் எதற்கிந்த
ஆணவம் பொடியா?
அழிந்து போகுமுன்
ஆதரி பொடியா..
பொடியா பொடியா..

முன் ஜென்மத்தில் பாலை வெளியினில்
தனியாய் வந்து மாட்டிக் கொண்டேன்
தண்ணீருக்கு நானேங்கியே
கண்கள் சொருகி விழுந்துவிட்டேன்..
வழியில் பார்த்தே நீ பதறிவிட்டாய்
கண்ணீர் கொண்டென்னை அணைத்துக் கொண்டாய்
இருந்தும் உயிர் நீங்கினேன்..

புதைந்து விட்டேன் புதைந்து விட்டேன்
என்றே நீயும் நினைத்திருந்தாய்
புலர்ந்து விட்டேன் புலர்ந்து விட்டேன்
அதையேன் நம்ப மறுக்கின்றாய்?

நிலமும் நிலத்தைச் சார்ந்த இடமும்
குறிஞ்சி என்று அறியாதவனா?
அறிந்தும் எதற்திந்த
தாமதம் நெஞ்சே..
புரிந்தும் ஏனிந்த
போர்க்களம் நெஞ்சே..
நெஞ்சே நெஞ்சே..

இந்த ஜென்மத்தில் உன்னை அடைந்திடும்
வரத்தை நானும் வாங்கி வந்தேன்..
என் தேடலில் நீ கிடைத்திட்டாய்
என் காயம் கவலை மறந்துவிட்டேன்..
இனிமேல் உனை நான் பிரிந்திருக்க
ஒருநொடி என்னால் முடியாதே..
காதலே நீ தீண்ட வா..

அடைந்து விட்டேன் அடைந்துவிட்டேன்
என் ஆசைகள் உன்னால் அடைந்துவிட்டேன்
கரைந்திருப்பேன் கரைந்திருப்பேன்
உன் காதலில் என்றும் கலந்திருப்பேன்