Thursday, February 25, 2010

47.என்னுள் நீ வெளிச்சமாய்.


நீதானே அழைத்தது 
நீராக நனைத்தது 
நாள்தோறும் உன்னை 
நினைத்து வேர்த்தேனே 
உயிரினை முழுதுமாய் வார்த்தேனே 

என்ன சொல்லுவாய் என்றே 
நான் ஏங்கினேன்
என்ன செய்யுவேன் உன் 
ஜீவன் தாங்கினேன்.

யாராரோ எனை பார்த்து 
அவர் நேசம் சொல்ல 
நானோ உன் விழி பார்த்து 
என் நேசம் சொல்ல 

துடிக்கும் மனமே வாராய் 
துணிந்து காதல் கூறாய்
ஏனடா யோசனை? 
இன்னும் தாமதம் என் மனம் தவித்திடும். 

எது நல்லது என்பதும் அறிந்திலேன்
எது கேட்டது அதையும் புரிந்திலேன்

ஏதோ என் வழி பார்த்து 
நான் போகும் போது 
நீதானே வரவேற்று 
நிழல் சேர்த்தாய் நூறு 

இதமான வார்த்தை தந்தாய் 
இதயத்தில் வேராய் ஆனாய் 
காலம்கை கூடட்டும் 
எட்டி பார்க்கிறேன் 
என்னுள் நீ வெளிச்சமாய்.. 

Wednesday, February 24, 2010

46.சில் சில்


மழையாகத் தூறிச் சென்றாயே
அலையாக வாரிக் கொண்டாயே

காலை மாலை எல்லை
கண்ணா நமக்கு இல்லை
இரவு ஒன்றே போதும்
இதமாய் பேசிட தோன்றும்

சில் சில் என அழைப்பாய்
சட்டென மலர்வேன் ஒரு பூவாய்
நில் நில் என உரைப்பாய்
ஓடி மறைவேன் சிறு காற்றாய்
குரலால் என்னை மயக்கிப் போனாய்..

வருகிறாய் இரவினில் வருகிறாய்
இமைகளைத் தொடுகிறாய்
இருளிலே கரைகிறேன் உறைகிறேன்..
விடிகையில் விரல் தொட்டுப் பார்க்கிறாய்
விருப்பங்கள் சொல்கிறாய்
விரும்பியே தருகிறேன் நிறைகிறேன்

சின்ன தொடுதல் போதுமடா
சிதறிப் போவேன்
ஒற்றை வார்த்தை போதுமடா
பதறிப் போவேனே
எந்தன் கோபம் உந்தன் முன்னால்
நுரையைப் போகும்..
உந்தன் முகம் கண்டால் போதும்
துயரம் மறப்பேனே..
உனையே எனக்கு பிடிக்கும் காரணம்

சொல் சொல் சொல்லிடவா
பொழுதுகள் ஆயிரம் போதாதே
வா வா எழுதிடவா
பக்கங்கள் லட்சம் போதாதே
எனையே திருடி எதிரினில் சென்றாய்

அளக்கிறாய் கண்கொண்டு பிளக்கிறாய்
எனக்குள்ளே சிதறினேன்
உயிர்வரை இனிக்கிறேன் இணைகிறேன்
சிரிக்கிறாய் கவலைகள் மறக்கிறேன்
நிழலாகத் தொடரவே
விரும்பினேன் சொல்லவே தயங்கினேன்

உன்னைப் போல என்னை யாரும்
வென்றதில்லை
நானும் கூட தோற்றதில்லை
இதுதான் காதலடா
கொஞ்சி கொஞ்சி பேசும் போது
குழந்தையாவேன்
கோபத்திலே திட்டிச் செல்வேன்
அதிலில்லை மோதலடா
இனி நான் உன்னை விலகிட மாட்டேன்

சில் சில் உன் மனசில்
உலவித் திரிவேன் யார் தடுப்பார்?
சொல் சொல் ஒருமுறை சொல்
உயிரின் உணர்வை யாரறிவார்?
இனி நம் வாழ்வில் வசந்தங்கள் கூடும்..

Wednesday, February 17, 2010

45.என்ன செய்வேனோ


இரவிலே எனது இரவிலே
இதயத்தை திறந்து சிரிக்கிறாய்
கனவிலே எனது கனவிலே
கைகளைக் கோர்த்து செல்கிறாய்

ஏன் பின்னர் நேரில் மறுக்கிறாய்
கண்ணைக் குளமாக்கி விடுகிறாய்
எனக்குள்ளே வலிக்கும் காயங்கள்
ஆற்றும் மருந்தேன இருப்பாயா?

முதல் முறை நேரில் பேசினாய்
புன்னகையில் நேசம் தூவினாய்
அந்த முதல் இரவுதான்
நீயென்னுள் ஆறாகப் பாய்ந்தாயே
பின்னர் வந்த இரவினில்
நீயென்னுள் வேராகிப் போனாயே

இது என்ன மாயமோ!
இரு இமை தொட்ட காயமோ?

எச்சரிக்கை செய்தும் மனது
எந்தன் பேச்சை மீறிச் செல்லுது
என்ன செய்வேனோ?

இது பனி உறையும் காலமா?
அனல் வந்து உருக்கும் நேரமா?
என்ன சொல்லி என்னைத் தேற்ற
நான் கொண்ட நோக்கமே மாறாதே
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
உண்மையும் சொல்லத் துணிவில்லை

இதற்கு மேல் சொல்லவா?
நானும் பெண்தான் அல்லவா?

உந்தன் வழி காத்து நின்றேன்
எந்தன் விழி நோகக் கிடந்தேன்
என்ன சொல்வாயோ?

Tuesday, February 16, 2010

44. உயிர்த்தீவில்



முதல் தொடுதலிலே உயிர் குடித்தாய்
இன்னும் என்ன?
அந்த மயக்கத்திலே மீளாமல்
மோகம் நாண..

உன்னை எட்டி நின்றே தான்
கட்டிக் கொள்கிறேன்
கண்ணால் நானே
உன் மென்மையிலே
எனை மறந்தேன் முழுதாய் தானே

உனது தூண்டலே எனை மலர்த்த
எனது கவிதை உனை அணைக்க
ஏதோ சொல்ல வருகின்றேன்
எதையோ சொல்லிப் போகின்றேன்

எது வரை நீளும்
என் தேடல் நாளும்
உன் பார்வையின் ஆழம் புரியாதா?

இது வரை மோதல்
இது வரை காதல்
என் விழிப்பின் நோக்கம் தெரியாதா?

கண்களை மூடி காட்சிகளைத் தேடும்
இது என்ன நிலையோ சொல்..
 உன்னைக் கொடுத்து எனைத் திருடும்
இது என்ன ஞான நிலையோ சொல்..

துள்ளிக் குதித்தாய் அலையாக
தழுவிக் கொண்டேன் கரையாக..
இன்னும் சொல்வேன் வலைப்பூவில்
உனையே சுமப்பேன் உயிர்த்தீவில்

இரவினில் வருவாய்
இமைகளைத் தொடுவாய்
இருளில் கரைப்பாய் இதமாக..

விடிகிற போதும்
விரல் தொட்டுப் படர்ந்து
விருப்பம் சொல்வாய் மெதுவாக..

43. நீ அறிவாயா?


உயிரே உயிரே வருவாயா?
உயிரைத் திருடிக் கொள்வாயா?
உறவாய் வந்தால் உதறிச் செல்வாயா?

இரவே இரவே கரையாதே
இமையின் ஈரம் குறையாதே
இதயத்தின் ஓரம் பனியாய் உறையாதே

அனுதினம் உன்னைப் பார்க்க - உன்
அழகினை அள்ளிப் பருக
நான் படும் அவஸ்தை அதை நீ அறிவாயா?

அதிகாலை உன்னில் விழித்து
அந்திமாலை உனக்குள் விழுந்து
அடங்கும் யோகம் அதை நீ தருவாயா?

என் பாதையெங்கும்
தேன்மழைதான் விழும்போதும்
உந்தன் பிம்பம் ஒவ்வொரு துளியிலும்
அதை நான் ரசிக்கின்றேன்

என் இரவெங்கும்
முழுநிலவே வரும் போதும்
உந்தன் சிரிப்பில் அதுவும் தோற்கும்
அதை நீ மறுக்காதே

பூத்திருக்கும் காதலினை
நான் சொல்லப் போவதில்லை
நீயாக உணர்ந்திட மாட்டாயா?

உன் சொல்லில்தான்
என் உலகம் பிறக்குமடா
விடியல் வருமா? என்றே
என்னுயிர் ஊசலாடுதடா..

உன் தோள் சாய்ந்து
என் பயணம் தொடர்ந்திடுமா?
உயிரும் ஏங்க நீயும் விரும்பி
எதைதான் சொல்வாயோ?

இனிமேலும் சொல்வதற்கு
எனக்கேதும் வார்த்தையில்லை
இதழ் சேர்த்து இதமே தருவாயா?

Monday, February 15, 2010

42.கண்டு கொண்டாடு


இதயமே கொள்ளாத தவிப்பிது
இமைகளில் இல்லாத துடிப்பிது
இடைவெளி கொல்லாமல் கொல்லுது
இசைந்து வருவாயா?

உலகமே தன்னாலே மறந்திட
உடலிலே செம்பூக்கள் வெடித்திட
உயிரிலே தேனாறு பாய்ந்திடும்
உணர்வு தருவாயா?

தேகம் தீண்டாமல் தேயுது
மோகம் கூறாமல் ஓயுது
தாகம் தீராமல் தீருது
தணிக்க வருவாயா?

யாரும் இல்லாத பொழுதிலே
வேரும் பூக்காதோ மண்ணிலே
சேரும் இல்லாத கடலிலே
அலையே வருவாயா?

வானும் காணாத நிலவிது
வண்டும் காணாத மலரினை
இருளும் காணாத ஒளியினை
பிறக்கச் செய்வாயா?

காற்றும் புகாமல் நெருங்கிடு
கனவே வராமல் தடுத்திடு
கவிதை விடாமல் எழுதிடு
கண்டு கொண்டாடு

41.கண்டு பிடிக்க வா


உன்னைக் கண்ட நொடியில்
நான் பிறந்தேன்
என்னை அங்கே மடித்துக்
கொடுத்து வந்தேன்
அந்த நாளும் எந்தன் நெஞ்சை
அகன்று போகுமா?
எந்த நாளும் உந்தன் நிழலை
தொடர வேண்டும் நான்.

அழைக்கிறேன் வருகிறாய் இரவினிலே
அணைக்கிறேன் மறைகிறாய் கனவினிலே
உயிரைத் திருடி உயிரில் மறைத்தவனே
உணர்வைத் திரட்டி உணர்வில் நிறைத்தவனே

அழுகிறேன் வழிகிறாய் துளித்துளியாய்
சிரிக்கிறேன் மலர்கிறாய் இதழிதழாய்
மண்ணைச் சேர மழைக்குத் தடையில்லை
என்னைச் சேர உனக்கும் தடையில்லை

விடியலாய் வருகிறாய் விழித்துக் கொள்வேன்
மடியிலே ஏந்தினால் பிழைத்துக் கொள்வேன்
ஒளியைப் போல என் வாழ்வில் வந்தவனே
அழகின் மொத்தம் அள்ளித் தந்தவனே

மௌனம் கலைக்கும் மொழியாய் வருவாயா?
மகிழ்வாய் பூக்கும் கவிதை தருவாயா?
ஓடி ஓடி ஓடி நானும் ஒளிந்து கொள்ள வா
தேடித் தேடி தேடி நீயும் கண்டு பிடிக்க வா

Saturday, February 13, 2010

40.உனது காதல்தான் மருந்தா?


ஒருமுறைதான் ஒருமுறைதான்
வாழ்ந்திட துடிக்கிறேன்
ஒருவரிதான் ஒருவரிதான்
கூறிட தவிக்கிறேன்

கீழிமை நான் மேலிமை நீ
உறங்கிட நினைக்கிறேன் 
என்னிடம் நீ உன்னிடம் நான்
மாறிட விரும்பினேன்
இரவினில் எதற்காக எதற்காக
அனல் கூட்டுகிறாய்
உறவென எனக்காக எனக்காக
உனை மாற்றுகிறாய்

அருகினில் நீயும் வந்தாய் 
அவஸ்தைகள் மொத்தம் தந்தாயே
பெருகிடும் கண்ணீர் துளியில் 
உனது பிம்பம் காண்பாயே 
உனது காதல்தான் மருந்தா?

விலகிடவே விலகிடவே ஒரு மனம் தவிக்குதே
விரும்பிடவே விரும்பிடவே ஒரு உயிர் துடிக்குதே 

என் இரவில் உன் இரவை கரைத்திட நினைக்கிறேன் 
உன் விழியில் என் விழியை பொருத்திடப் பார்க்கிறேன்
இனி நாம் ஒருநாளும் கணம்தோறும் பிரியாமலே 
உனக்கோ என்னாசை எப்போதும் புரியாமலே 

எதை நான் உனக்கு சொல்ல? 
எதைத்தான் எனக்குள் சொல்ல
உண்மை யாவும் சொல்ல
உனக்கொரு தருணம் வருமா?
உனது மௌனத்தில் உறைந்தேன்..

39.உன் ஆசைகள் என் தேவைகள்



என் காதலுக்கு தோல்வியில்லை 
உன் காதல் சொல்லத் தேவையில்லை 
உன்னை மறந்தால் நான் இறப்பேனடா..

உன் விழி பார்த்து உன் விரல் சேர்த்து 
நடைபோடும் ஒரு நேரத்தில் 
என் பெரும் சோகம் அது எனைவிட்டு
உருண்டோடும் வெகுதூரத்தில்

என் சோகங்கள் என் பாரங்கள் 
என்னோடு அது போகட்டும்
உன் ஆசைகள் உன் தேவைகள் 
இனி என்னோடு அது வாழட்டும். 

உன் மடி மீது என் தலை சாய்த்து  
மரணத்தை நான் வரவேற்பேன். 
உன் விழி மோதி உன் தலைகோதி 
என் பிறப்பினையே முழுமை செய்வேன்

Wednesday, February 10, 2010

38. கட்டிப் புரளும் வெள்ளம்

மழையெனவே நனைத்திடவா
அலையெனவே அணைத்திடவா
நிலவெனவே நிறைத்திடவா

ஒற்றைச் சொல்லில் உயிர் நிரப்பு
ஒற்றைக் கல்லின் சிலை சிறப்பு
ஒற்றை அணுவே புவி பிறப்பு

இன்னும் என்ன சொல்லிடுவேன்
இதயம் ஏறிக் கிள்ளிடுவேன்

பயம் எதற்கு இனி உனக்கு
வயமானாய் நீ எனக்கு
காயம்யாவும் உதிர்ந்திருக்கு

தொட்டுச் செல்லும் தென்றல் தான்
கட்டிப் புரளும் வெள்ளம் தான்
எட்டி நடக்கும் காலம் தான்

யாவும் நீயாய் ஆனதெப்போ?
காயம் ஓடிப் போனதிப்போ..

Tuesday, February 9, 2010

37.மடிதேடி


உன் பாராட்டில் நான் மலர்கிறேன்
உனை பார்க்காமலே உலர்கிறேன்
நீர் கொஞ்சம் கொண்டு வா
வேர் கொஞ்சம் நனைத்துப் போ

தாலாட்ட எனக்கும் தாயில்லை
தாலாட்ட நானும் தாயில்லை 

மடிதேடி நானும் அலைகிறேன்
காற்றடித்த மேகமாய் கலைகிறேன்

நான் மீண்டும் குழந்தையாகும் வரம் வேண்டும்
நான் மீண்டெழ காயங்கள் ஆற வேண்டும்

தொலைகிறேன் என்னைக் கண்டெடு
அலைகிறேன் என்னை வென்றெடு

என் முற்றத்தில் கோலமானாய்
என் பின்வாசலில் மலரானாய்

எப்படி எனக்குள் வண்ணமானாய்?
என் நினைவெங்கும் வாசமானாய்? 

36. ரகசியம் அறிவாயா?


படபடக்கும் இமையின் மொழியறிவாயா?
துடிதுடிக்கும் இதயத்தின் இசையறிவாயா?
மௌனிக்கும் இதழின்
துடிப்பறிவாயா?

நடனமாடும் விரல் பேசும் 
ரகசியம் அறிவாயா?
உடன் நடக்கும் 
பாதச் சுவடின் வலியறிவாயா?

உன் சுவாசம் தீண்டிப் பூக்கும் 
என் இதழறிவாயா?
உன் வாசம் தாக்கி உதிரும் 
என் சோகமறிவாயா?

நானுமறியாது 
சிறைப்பட்டேன் இரங்கி விடுவிப்பாயா?
நீயுமறியாது 
திருடினாய் திரும்பத் தருவாயா?

Friday, February 5, 2010

35. ஒரே பாடல் உன்னை அழைக்கும்..

இந்த காதல் ஒரு மோசமான கனவுதானா?
இந்த கனவு ஒரு நேசமான காதல்தானா?

எப்படி என்னுள் வந்தாய்?
இப்படி இம்சைகள் தந்தாய்?

எந்தன் வழியில் காத்து நின்றாய்...
எல்லா நொடியும் காதல் என்றாய்..
கரையாத கல் நெஞ்சை
நுரையாக மாற்றிச் சென்றாய்..
உருகாத என் மனதை
ஒருவாறு தேற்றிச் சென்றாய்..

ஏன் எண்ணம் நிறைத்தாய்..
ஏன் பின்னர் மறைந்தாய் ..
ஏன் என்னில் உறைந்தாய்..
ஏன் எங்கோ விரைந்தாய்..

இந்த மௌனம் நெருப்பாய் சுடுகிறதே..
அணைத்து விடு.. அணைந்து விடு..
இந்த பார்வை கோபம் சொல்கிறதே ..
பொறுத்து கொள் புரிந்து கொள்..

இனி வரும் காலம் வசந்தமாகும்..
இதுவரை வாழ்வு கசந்த போதும்..
இந்த நம்பிக்கை இருக்கும் வரை..
எந்தன் நெஞ்சில் என்ன குறை.. ?