Wednesday, June 30, 2010

59.மனசெல்லாம் நீதானே..

தீராதே காதல் தீராதே 
என் ஆயுள் உள்ளவரை தீராதே 
மாறாதே காதல் மாறாதே 
நான் சாகும் நிலைவரை மாறாதே 

உனக்கெனத் தானே உயிர் வளர்த்தேன்
உனக்கது தெரியாதா?
உனக்கென நானும் யாதும் செய்வேன்..
உனக்கது புரியாதா?

தீயில் நீயும் படுக்கச் சொன்னால் 
நொடியில் சாம்பல் துகளாவேன்..
கடலில் நீயும் குதிக்கச் சொன்னால் 
கணத்தில் கரையில் ஒதுங்கிடுவேன்..

எதையும் உனக்கென இழப்பேனே 
உன்னை மட்டும் முடியாதே.. 
எதையும் மறந்து தொலைப்பேனே 
உன்னை மட்டும் முடியாதே.. 

கண்ணுக்குள்ளே தானே விதையாகி 
நெஞ்சுக்குள்ளே வேரானாய்..
மண்ணுக்குள்ள போற காலமட்டும் 
மனசெல்லாம் நீதானே.. 

கனவில் வந்து கைது செய்து
நினைவின் சிறையில் நீய்டைத்தாய் 
உணர்வில் உயிரில் கலந்து விட்டு 
உடலில் மட்டும் தனித்திருந்தாய் 

நெஞ்சே நீயும் மறுக்காதே 
தஞ்சம் நீ மறவாதே 
நினைவே நீயும் வெறுக்காதே 
உயிரும் பிழைக்காதே 

உன்னை விட்டு விலகி வரும் வெற்றி 
தோல்விக்கு சமம்தானே 
உன்னோடு சேர்ந்து வரும் தோல்வி 
வெற்றிக்கு மேல்தானே.. 

Monday, June 28, 2010

58.உறவாடு எந்தன் ஜீவனே


அலையாடும் கண்கள் இமை சேருதே
விளையாடும் கைகள் இதம் சேர்க்குதே
கொடிப்பூக்கள் வந்து மடி சேருதே
என்னோடு நீயும் சேரடா..


இரவாக வந்து நீ தீண்டினாய்
உறவாக வந்து நீ தாங்கினாய்
கரையாத இரவில் பிரியாமலே
உறவாடு எந்தன் ஜீவனே


வேராக வந்து பூ தூவினாய்
நேராக வந்து வலி நீவினாய்
போதாது அன்பே போதாதடா
ஜென்மம் ஏழுமே தீராதடா


நட்பாக வந்தாய் நடை பழகினேன்
விழியாக வந்தாய் வழி காண்கிறேன்
உயிராக வந்தாய் இணை சேர்கிறேன்
பிரியாதே என்னை இனியுமே

57.என்ன செய்ய நான்?


உனக்குள்ளே என்னை வைத்துத் தைத்திடவா?
செடிக்குள்ளே பூவொன்றை மறைத்திடவா..
வெடித்தெழும் வாசனைதான் சொல்லிவிடுமே
என்ன செய்ய நான்?


எனக்குள்ளே உந்தன் எண்ணம் வதைக்கிறதே
இரவினில் கனவெல்லாம் நிறைக்கிறதே
இதயத்தில் வலி ஒன்று பிறக்கிறதே
என்ன செய்ய நான்?


பார்வை பட்ட நொடியிலிருந்தே
பற்றி எரிகிறேன்
புன்னகையின் ஒலியில் தானே 
புதைந்தே போகிறேன்


கைகள் கோர்த்து சென்ற கணத்தை 
பதிவு செய்கிறேன்
கால்கள் செல்லும் பாதையெங்கும் 
உன்னைப் பார்க்கிறேன்


மீதமுள்ள காலம் உன்னில்
வாழத் துடிக்கிறேன்
யாவுமுள்ள உறவாய் உன்னை
எண்ணிக் கொள்கிறேன்


வேறெதுவும் தேவை இல்லை
காதல் போதுமே
இம்மென்று சொன்னால் எந்தன் 
கைகள் நீளுமே


ஏனோ என் மனமிங்கு தவிப்பது ஏனோ?
எனை உணர்வுகள் கொல்வது ஏனோ?
இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வாராயோ..


நீயா என் இரவுகள் திருடிய தீயா?
என் இமைகளில் வந்தது நீயா?
என் இதயத்தில் உறைந்திட வந்தாயா?


கவிதைகள் ஆயிரம் தந்து செல்கிறாய்..
படித்திட நீயேன் வருவதில்லை
கனவாய் நானும் மறையுமுன்னே
காதலையேந்தி வாராய்..


பாராய் என் அவஸ்தைகள் நேரில் பாராய்
என் அத்தனை செயலுக்கும் வேராய்
ஒரு வார்த்தை நீதான் தந்தாயே..


காதல் எனை சுழலச் செய்வது காதல்
நான் சுவாசித்திருப்பது காதல் 
என் காதல் முழுதும் உனக்கே சொந்தமடா..


ஒருமுறைதான் இந்த வாழ்க்கையே & உன் 
ஒருவனைத்தான் வேண்டி நிற்குதே
மௌனம் விட்டு சம்மதம் 
சொன்னால் உயிர்ப்பேன்

Sunday, June 27, 2010

56.காற்றைக் கைது செய்




பொடியனே தெரியுமா?  - என் 
புதையல் நீதானடா
விடியலே தெரியுமா?  - என் 
விழியும் நீதானடா


உந்தன் பேரைத்தான் கேட்டால் போதும்
உயிரில் பூப்பூக்குதே
உந்தன் பார்வைதான் பட்டால் போதும் 
இரவில் ஒளி தாக்குதே
இசையும் கேட்கின்றதே


இரக்கம் சிறிதுமின்றி என்
உறக்கம் பறித்துப் போனாய்
காற்றைக் கைது செய்து என்
வாசம் திருடிப் போனாய்


உன்னைக் காணாமல் என் மனமிங்கு 
தூண்டில் புழுவானதே
வார்த்தை சொல்லாத போதும் உந்தன் 
பார்வை வலுவானதே
காதல் நிலையானதே


எனக்குள் நீயும் வசிக்க
என் உயிரில் கூடு செய்வேன்
எனக்குள் இருக்கும் காதல் 
மடை மாற்றி உன்னில் தைப்பேன்..


சிரித்து சிரித்தேதான் எந்தன் 
கவனம் ஈர்த்து சிலையாக்கினாய்
மறுத்து மறுத்தேதான் என்னை 
உன்னில் கரைத்து நுரையாக்கினாய்
நானும் நீயாகினாய்..

55.கவிதை கனவு



நட்புக்குள்ளே காதல் பூவை யார் வைத்தது?
நெஞ்சுக்குள்ளே தீயை வைத்து யார் தைத்தது?
எட்டி எட்டி போகும் மனதை நீயறிகிறாய்
தட்டி தட்டி மீண்டும் என்னில் போர் தொடுக்கிறாய்..

இரவு நேர விண்மீன் பெண்ணாய்
என்னை மாற்றினாய்..
இதயம் வேண்டி நின்ற போதும் 
சிரித்து மழுப்பினாய்..
இது வழியா? இதய வலியா?

என்ன சொல்ல? என்னைக் கொல்ல
உந்தன் ஒற்றை வார்த்தை போதுமே..

உறங்கும் போது உந்தன் குரலில் 
என்னை மறக்கிறேன்
விழிக்கும் போது என்னை மறந்து
உன்னை நினைக்கிறேன்..

காயம் நூறு கண்ட போதும் 
தாங்கிக் கொள்கிறேன்.. 
உன் ஒற்றை வார்த்தை தாங்காமல்தான் 
பொங்கி அழுகிறேன்.. 

கவிதை கனவு கண்கள் வழியே 
நிறைந்து வழிகிறாய்.. 
நெஞ்சுக்குள்ளே ஓவியமாய் 
நின்று சிரிக்கிறாய்.. 

வானம் என்ன பூமி என்ன 
மாறிப் போகலாம்..
நீ சொன்ன வார்த்தை மட்டும் 
என்றும் மாறிப் போகுமா? 

கடலும் என்ன அலையும் என்ன 
வற்றிப் போகலாம்.
எந்த காயம் கூட 
காலப்போக்கில் ஆறிப் போகலாம்..

எந்த உறவும் வேண்டாமென்று 
தனித்து வந்தவள் 
உன் காதல் மட்டும் போதுமென்று 
வாழ்ந்து வருபவள்.. 

போதும் போதும் உந்தன் மௌனம்
என்னை அரிக்குதே..
வேண்டும் வேண்டும் என்று உள்ளம்
உன்னைத் துரத்துதே..

என்னை விடவும் உன்னை அதிகம்
காதல் செய்கிறேன்..
உன் புன்னகைக்கு எந்தன் வாழ்வை
ஈடு தருகிறேன்.. 

54.அன்பும் அக்கறையும்


காதல் சொல்வாய்
காயம் கொள்வாய்
காதல் செய்வாய்
காலம் வெல்வாய்

ஒருவரையொருவர் நேசிக்கும் 
அன்புக்கு விலையே இல்லையடா..
அன்பைத் தவிர உலகில்
எதுவும் நிலையே இல்லையடா..

நோயைப் போக்கும் மாயம் உள்ளது
அன்பும் அக்கறையும்
தீயக் கூட குளிரச் செய்து 
போக்கும் எக்கறையும்.

53.ஒரு ஒற்றைக் கேள்வி


உனக்கும் ஒருநாள் காதல் வரலாம் 
அப்போதென் போல் காயம் படலாம்
என் உயிரில் கலந்த நினைவுகள் எல்லாம்
உன் உறக்கம் பறித்து வேதனை தரலாம்

ஒரு ஒற்றைக் கேள்வியால் எனை மீட்டாய்
அதே ஒற்றைக் கேள்வியால் தீயிலிட்டாய்
அந்த கேள்விகளெல்லாம் உன்னை உலுக்கி
கேள்விகள் கேட்கும் நாள் வரலாம்

காதல் செய்த குற்றம் தவிர
வேறு என்ன செய்தேன்?
காதல் மட்டும் வேண்டாமென்றால் 
நானும் எங்கு செல்வேன்?

அந்த காதல் உன்னைக் கைது செய்யும்
விடுதலை கிடையாது
அமுத காதல் விஷமாய் மாறும் 
பிழைக்க வழியேது?

ஒருநாள் நீ உணரலாம் 
அதுவரை நானும் 
இருந்தால் பார்க்கலாம்
காதலும் வாழும்

உன் விழி பார்க்கையில் 
என் உயிர் போகனும் 
என் விழி மூடினால் 
உன் கை தாங்கணும்
உனக்குள்ளே நானிருக்கேன் 
வந்து விடு தந்து விடு.

52.அழகே வா


ஒரு பார்வை தந்தாய் 
என் விழி பூத்தது
ஒரு வார்த்தை சொன்னாய்
என் உயிர் வேர்த்தது

இதழ் சேர்க்காமல் எனக்குள்ளே
அனல் மூட்டினாய்
கைகோர்க்காமல் நரம்பெல்லாம்
முறுக்கேற்றினாய்..

அழகே வா என் ஆசை தீர்க்க 
அழகே வா என் ஓசை நீர்க்க

நீ பேசாத நாட்களில் 
என் நாட்குறிப்பேது கண்ணா
நீ தீண்டாத நாட்களில்
என் பூ உதிராதோ கண்ணா

உன் சுவாசம் இடம்மாற 
என்னில் புது வாசம் பிறக்கின்றதே
நம் நேசம் மாறாது 
என்றும் என்ற கானம் இசைக்கின்றதே

51.கனவே நீ


என் கண்ணைப் பார்த்துச் சொல்லு
என் கண்ணா
என் மேல் காதல் இல்லையே?
இரவுதான் காத்துக் கிடக்கு 
இதயம்தான் வேர்த்துக் கிடக்கு

முதல் முறை நாம் சந்திக்கையில் 
முன் ஜென்ம பந்தம் கண்டேன்
மறுமுறை நாம் சந்திக்கையில் 
காதலுக்கே சொந்தம் கொண்டோம்

உன்னெஞ்சில் எனக்கென்று 
இடமுண்டு நானறிவேன்
என் ஆயுள் தீருமுன்னே
உன் வாயால் சொல்ல வைப்பேன்
விடியாத இரவு இல்லை
படியாத உறவு இல்லை
இது பொய்யில்லை 
நீயதை உணர வைப்பேன்.. 

என்னெஞ்சில் அடைகாத்த
காதலிங்கே ஜெயித்திடனும்
கிளைதாவும் குரங்குமனம்
ஊர்க்கதையும் பொய்த்திடனும்

உன்னோடு வாழ்ந்திருந்தால்
மரணமிங்கே வாராது
உயிரே நீ விலகாதே
என்தேடல் தீராது
கனவே நீ கலையாமல்
நினைவே நீ தேயாமல் 
என் வாழ்க்கைக்கு நீயொரு 
அர்த்தம் சொல்லு..

50.முயற்சிகள் தோற்பதில்லை



மாற்றம் இது மாற்றம்
நெஞ்சில் அனல் மூட்டும் மூட்டும்
தேற்றும் மனம் தேற்றும்
உன்னில் காதல் பூக்கும் பூக்கும்

தடைகளும் தீர்ந்து
தயக்கமும் நீங்கும் நீங்கும்
வார்த்தைகள் சேர்ந்து 
வாழ்க்கையாய் மாறும் மாறும்

முயன்றால் முடியும் 
முயற்சிகள் தோற்பதில்லை
உன்னிலே உறைந்தேன்
உன்னிலே உயிர்த்தேன்
உன்னிலே கரைந்தேன்
உன்னையே கரைத்தேன்
உன்னிலே நிறைந்தேன்
உன்னையே நிறைத்தேன்

Friday, June 4, 2010

49.தீராது நம் காதல்




இரவிலே என் இரவிலே 
இயங்கினாய் நீயடா.. 
இதயமே ஆனாய் உணரடா 

உறவிலே உன் உறவிலே 
மயங்கினேன் நானடா..
மனமெல்லாம் தேனாய் நீயடா  

காணாமல் போனேனே 
என் கண்ணின் எதிரிலே - ஏதும் செய்ய 
தோணாமல் உறைந்தேனே 
உன் நினைவின் சிறையிலே 

கைப்பிடித்து தூக்கி விட்டாய் 
கடற்கரையில் - இன்று 
கைப்பிடிக்க தயங்குகிறாய்
உயிர்தரையில் ..

இந்த கண்ணீரெல்லாம் மிக வலியானது 
இதயத்தை கிழிக்கின்றது  
அட நீ தொட்டதால் அந்த இதயம் கூட 
வலியோடு சிரிக்கின்றது.. 

வேண்டாமே துயரங்கள் 
நம் அன்பின் பாதையில் 
தீண்டாயோ விழி பார்த்து 
நான் மீள்வேன் வேகத்தில்

உனக்கெனவே  உயிர்  கொண்டேன்  
என நினைத்திருந்தேன்  
உன்னை  நினைக்கையிலே  
உயிர்  முழுதும் தேன்  கொண்டேன் 

உன்  பிடிவாதத்தில்  நம்  நேசத்தினை 
பலியாக்கக்  கூடாதடா .. 
கரை  கண்ட  பின்  மீண்டும்  கடலுக்குள்ளே  
எனை  வீசி  போகாதடா .. 

ஏன்  இந்த  பிரிவென்று  
மனம்  கேட்கும்  போதிலே   
இதுவும்  ஒரு  நிலையென்று  
சொல்லும்  காதலே   

என எடை தாங்கி உன் தோள்
தந்தாய் நான் கீழிறங்க.. 
என மனமறிந்தும் ஒரு சொல் 
சொன்னாய் மீளா விழியுறங்க .. 

இந்த காதல் என்ன ஒரு கவிதை போலா 
ரசித்ததும் ஓரங்கட்ட 
இந்த காதல் முழு வாழ்க்கைதானே 
நீயின்றி எங்கே செல்ல 

தீராது நம் காதல் 
இந்த ஜென்மம் முடியலாம் 
சோராது என் மனமும் 
உன்னைச் சேரும் வரையிலும்..