Monday, June 28, 2010

57.என்ன செய்ய நான்?


உனக்குள்ளே என்னை வைத்துத் தைத்திடவா?
செடிக்குள்ளே பூவொன்றை மறைத்திடவா..
வெடித்தெழும் வாசனைதான் சொல்லிவிடுமே
என்ன செய்ய நான்?


எனக்குள்ளே உந்தன் எண்ணம் வதைக்கிறதே
இரவினில் கனவெல்லாம் நிறைக்கிறதே
இதயத்தில் வலி ஒன்று பிறக்கிறதே
என்ன செய்ய நான்?


பார்வை பட்ட நொடியிலிருந்தே
பற்றி எரிகிறேன்
புன்னகையின் ஒலியில் தானே 
புதைந்தே போகிறேன்


கைகள் கோர்த்து சென்ற கணத்தை 
பதிவு செய்கிறேன்
கால்கள் செல்லும் பாதையெங்கும் 
உன்னைப் பார்க்கிறேன்


மீதமுள்ள காலம் உன்னில்
வாழத் துடிக்கிறேன்
யாவுமுள்ள உறவாய் உன்னை
எண்ணிக் கொள்கிறேன்


வேறெதுவும் தேவை இல்லை
காதல் போதுமே
இம்மென்று சொன்னால் எந்தன் 
கைகள் நீளுமே


ஏனோ என் மனமிங்கு தவிப்பது ஏனோ?
எனை உணர்வுகள் கொல்வது ஏனோ?
இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வாராயோ..


நீயா என் இரவுகள் திருடிய தீயா?
என் இமைகளில் வந்தது நீயா?
என் இதயத்தில் உறைந்திட வந்தாயா?


கவிதைகள் ஆயிரம் தந்து செல்கிறாய்..
படித்திட நீயேன் வருவதில்லை
கனவாய் நானும் மறையுமுன்னே
காதலையேந்தி வாராய்..


பாராய் என் அவஸ்தைகள் நேரில் பாராய்
என் அத்தனை செயலுக்கும் வேராய்
ஒரு வார்த்தை நீதான் தந்தாயே..


காதல் எனை சுழலச் செய்வது காதல்
நான் சுவாசித்திருப்பது காதல் 
என் காதல் முழுதும் உனக்கே சொந்தமடா..


ஒருமுறைதான் இந்த வாழ்க்கையே & உன் 
ஒருவனைத்தான் வேண்டி நிற்குதே
மௌனம் விட்டு சம்மதம் 
சொன்னால் உயிர்ப்பேன்

No comments:

Post a Comment