Thursday, July 22, 2010

71.விழியே விளக்காகும்


கனவினில் கனவினில் நுழைந்து விட்டாய்
கவிதைகள் வாசித்து எழுப்பி விட்டாய்
விலகிட விலகிட அருகில் வந்தாய்
பழகிட பழகிட அழகைத் தந்தாய்

முதல் நாளில் உன் பார்வைக்குள்
ஒரு பதியம் செய்திட்டாய்
மறுநாளில் உன் வார்த்தைக்குள்
ஒரு வசியம் வைத்திட்டாய்

இரவினில் தினம் பேசுகிறாய்
இமைகளை நினறு வாசிக்கிறாய்
இதயத்தில் அனல் வீசுகிறாய்
இருந்துமே உண்மை மறைத்துக் கொன்றாய்

ஏனடா அட ஏனடா
உருகுதே என் உயிரடா
ஒரு வார்த்தை சொன்னால்
எந்தன் வாழ்வு இன்னும் நீளாதோ
மறு வார்த்தை பேசாமல் சென்றால்
என்னை மரணம் தீண்டாதோ

காலையில் நான் எழும் போது
ஒரு முத்தம் நீ தருவாயோ
மாலையில் வீடு திரும்புகையில்
மறைந்தே கட்டிக் கொள்வாயோ

ஆயிரம் என் ஆசைகள்
ஆயினும் சொல்ல மறுக்கிறேன்
உண்மை சொல்லாத போதும் எந்தன்
உயிரும் உனக்காகும்..
இருளும் சூழ்கின்ற போது உந்தன்
விழியே விளக்காகும்.

Saturday, July 17, 2010

70.ஐந்திணை


கைக்கிளையா? பெருந்திணையா?
இரண்டும் இல்லா ஐந்திணையே..
ஐந்திணையா அதில் எத்திணையோ?

கடலும் கடலைச் சார்ந்த இடமும்
நெய்தல் என்று தெரியாதவனா?
தெரிந்தும் எதற்கிந்த
கேள்விகள் கண்ணா..?
புரிந்தும் புரியா
நடிப்பெல்லாம் ஏனோ?
ஏனோ? ஏனோ?

முன் ஜென்மத்தில் ஒரு மீனவப்
பெண்ணாய் நானும் வந்து பிறந்திருந்தேன்
ஒரு அலை வந்து என்னைக் கடத்திட
படகில் நீதான் கரை சேர்த்தாய்
அன்றுடன் உன்னில் நான்
கலந்துவிட்டேன்
இரவெல்லாம் கனவினில்
திளைத்திருந்தேன்
ஒருநாள் மரணம் எனைத் தீண்டவே

பிரிந்து விட்டேன் பிரிந்து விட்டேன்
என்று நீயும் நினைத்திருந்தாய்
பிறந்து விட்டேன் பிறந்து விட்டேன்
நீயேன் நம்ப மறுக்கின்றாய்?

வயலும் வயலைச் சார்ந்த இடமும்
மருதம் என்று தெரியாதவனா?
தெரிந்தும் எதற்கிந்த
தனிமை அன்பே..
துணிந்து வந்தென்னை
கரம்பிடி இன்றே..
இன்றே இன்றே..

முன் ஜென்மத்தில் மருதத் தலைவனின்
மகளாய் நானும் பிறந்திருந்தேன்
ஒரு அறுவடை நிகழ்ந்த நாளொன்றில்
கருக்கருவால் பட்டு நான் துடித்தேன்
மனதில் உனைத் தாங்கி நான் சரிய
மடியில் என்னை நீயேந்திக் கொண்டாய்
இருந்தும் கண் மூடினேன்..

இறந்து விட்டேன் இறந்து விட்டேன்
என்று நீயும் நினைத்திருந்தாய்..
இணைந்திடவே பிறந்து விட்டேன்
அதையேன் நம்ப மறுக்கின்றாய்.?

காடும் காட்டைச் சார்ந்த இடமும்
முல்லை என்று தெரியாதவனா?
தெரிந்தும் எதற்கிந்த
மௌனம் அழகே.?
மௌனம் விட்டு
மொழி சொல்லு அழகே..
அழகே அழகே..

முன் ஜென்மத்தில் இந்த காட்டினுள் ஒரு
முல்லைக் கொடியாய் பூத்திருந்தேன்..
ஒரு மரமென நீ அணைத்திட்டாய்
உன்மேல் நானும் படர்ந்திருந்தேன்..
விறகு வெட்டி உனை வெட்ட
என் உடலால் நானும் தடுத்து
சோர்ந்தே நான் சரிந்தேனே..

மரித்துவிட்டேன் மரித்துவிட்டேன்
என்றே நீயும் நினைத்திருந்தாய்
மலர்ந்து விட்டேன் மலர்ந்து விட்டேன்
அதையேன் நம்ப மறுக்கின்றாய்?

மணலும் மணலைச் சார்ந்த இடமும்
பாலை என்று அறியாதவனா?
அறிந்தும் எதற்கிந்த
ஆணவம் பொடியா?
அழிந்து போகுமுன்
ஆதரி பொடியா..
பொடியா பொடியா..

முன் ஜென்மத்தில் பாலை வெளியினில்
தனியாய் வந்து மாட்டிக் கொண்டேன்
தண்ணீருக்கு நானேங்கியே
கண்கள் சொருகி விழுந்துவிட்டேன்..
வழியில் பார்த்தே நீ பதறிவிட்டாய்
கண்ணீர் கொண்டென்னை அணைத்துக் கொண்டாய்
இருந்தும் உயிர் நீங்கினேன்..

புதைந்து விட்டேன் புதைந்து விட்டேன்
என்றே நீயும் நினைத்திருந்தாய்
புலர்ந்து விட்டேன் புலர்ந்து விட்டேன்
அதையேன் நம்ப மறுக்கின்றாய்?

நிலமும் நிலத்தைச் சார்ந்த இடமும்
குறிஞ்சி என்று அறியாதவனா?
அறிந்தும் எதற்திந்த
தாமதம் நெஞ்சே..
புரிந்தும் ஏனிந்த
போர்க்களம் நெஞ்சே..
நெஞ்சே நெஞ்சே..

இந்த ஜென்மத்தில் உன்னை அடைந்திடும்
வரத்தை நானும் வாங்கி வந்தேன்..
என் தேடலில் நீ கிடைத்திட்டாய்
என் காயம் கவலை மறந்துவிட்டேன்..
இனிமேல் உனை நான் பிரிந்திருக்க
ஒருநொடி என்னால் முடியாதே..
காதலே நீ தீண்ட வா..

அடைந்து விட்டேன் அடைந்துவிட்டேன்
என் ஆசைகள் உன்னால் அடைந்துவிட்டேன்
கரைந்திருப்பேன் கரைந்திருப்பேன்
உன் காதலில் என்றும் கலந்திருப்பேன்

69.இயற்கை செய்கிற லீலை.


சொல்லாமல் தொக்கி நிற்கும் காதல்
கொல்லாமல் கொல்லுமது சாதல்
பொல்லாத வேதனையின் தஞ்சம்
சொல்லத்தான் ஏங்குகிற நெஞ்சம்

ஒரு போருக்கு நாம் செல்வதைப் போல்
இந்த காதலினை சொல்வதுதான்
இதில் வெற்றியும் தோல்வியும்
இயற்கை செய்கிற லீலை..

நட்பின் பயணம் காதலைத் தொடலாம்
இரண்டும் இணைந்திடலாம்
காதல் நதியினிலே காயம் கழுவிடலாம்

கண்களில் கசியும் காதலினை
நெஞ்சம் சிறிதும் அறியாதா?
புறக்கணித்தால் என்னாகும்?
என்றேதான் மனம் எண்ணி புதைகிறதே..

காதலின் முன்னே கடவுளும் என்ன?
வலிகள் வதைத்திடுமே
உள்ளம் சிதைந்திடுமே உயிரும் உறைந்திடுமே

பெண்ணின் மனது ஆழமென்று
பலபேர் இங்கு சொல்வதுண்டு
ஆண்மனதும் ஆழம் தான்
அறிந்திடத்தான் வழியிங்கு பிறந்திடுமா?..

Wednesday, July 14, 2010

68.மறவேன் உந்தன் காதலினை


உன்னோடு வாழ்ந்திடவே தான்
உயிரை இன்னும் வைத்திருக்கேன் நான்
மண்ணோடு போகும் போதும் 
மறவேன் உந்தன் காதலினை

கண்ணோடு மோதியதாலே
காதல் வலிதான் கொண்டேன் அன்பே
என்னோடு நீ வரும் போது 
எல்லா வலியும் பறந்திடுமே

தினந்தோறும் என் இரவை 
உன் வரவில் நிறைத்திருக்கும் 
வரம் கூட வேண்டாம் கண்ணே
சாபம் தந்திட வா

நூறு கோடி ஆண்கள் உண்டு
உன்னைப் போல் யாருமில்லை
உந்தன் அணுகுமுறையாலே
கொள்ளை போனேனே

வேறெதுவும் தேவை இல்லை
சிறுபார்வை போதுமடா
அதுவேதான் சம்மதமாய்
எண்ணி வாழுவேன்

யாராரோ கடந்தார் அன்பே
நீதானே கடத்தினாய் என்னை
யாராரோ உடலைப் பார்க்க
நீதானே உள்ளம் பார்த்தாய்

கற்பனைகள் ஏதுமின்றி
கனவுகளின் தூதுமின்றி 
சிறகடித்த என்னை நீ
கிறங்கடித்தாயே..

கவிதைகள் ஆயிரமாய்
காதலது பாயிரமாய்
படைத்திடவே செய்தாயே
படைப்பாளனே

ஒரு நாள் நான் பேசா விடினும்
உயிரிங்கே உறையுது அன்பே
உருகாத எந்தன் மனதும்
மருகித்தான் கிடக்குது உன்னில்

67.அன்பே என்னை நீங்காதிரு


அழகே ஆதரி
ஆகவே காதலி
அன்பே வேரடி
ஆயுளே நீயடி

கனவில் உலவிச் செல்ல
கண்கள் மூடிக் கிடந்தேன்
கண்ணில் முத்தமிட்டு
கனவை நேரில் செய்தாய்

பூக்கள் கிள்ள வந்தாய்
வேரில் நீரைக் கசிந்தேன்
வேரில் நீர் பொழிந்து
பூக்கள் மலரச் செய்தாய்

அன்பே என்னை நீங்காதிரு
இரவே இன்னும் ஓயாதிரு

உறக்கம் தொலைத்தோம்
உயிரில் கலந்தோம்
தேனோடு தீயைத் தீண்டினோம்

நெருக்கம் அதிகரிக்க
காற்றும்  மூச்சுத் திணற
காதல் அதிகரிக்க
காமம் மூச்சுத் திணற

வியர்வை வழிய உந்தன்
விரல்கள் உறிஞ்சுகிறதே
விரல்கள் ஊற இன்னும்
வேகம் கூடுகிறதே

அழகே உன்னால் நான் வாழ்கிறேன்
அசலே உன்னால் நான் சாகிறேன்

உயிரைத் தரவா?
உடலாய் வரவா?
ஒன்றோடு ஒன்று சேரவா.

Tuesday, July 13, 2010

66.என்னாளுமே உன்னோடு

என் கவிதையின் வார்த்தைக்குள்
வசிப்பவன் நீயல்லவா
என் வார்த்தையின் பொருளை
ரசிப்பவன் நீயல்லவா

உன் ரசனைகள் அனைத்திற்கும்
ரசிகை நானல்லவா
உன் ராகங்கள் பிறக்கையில்
மலருது பூவல்லவா

நினைவோடு இதம் சேர்த்து
நிறைத்தாயே இதம் கோர்த்து
வாழ வா

கொண்டாடுதே கொண்டாடுதே
உன் ஜீவனும் என் ஜீவனும்
திண்டாடுதே திண்டாடுதே
உன் ஆண்மையும் என் பெண்மையும்

செல்ல செல்ல புது வழியுண்டு
அதைக் கண்டு பிடிப்பாய்
மெல்ல மெல்ல என் நாணத்தை
கூண்டில் சிறை வைப்பாய்

உன் விரல் ஊறும் தேகத்தில்
என் உயிரும் உருகும் மோகத்தில்

என் காதலே என் காதலே
என் பெண்மைக்குள் ஏதோ செய்தாய்
என்னாளுமே உன்னோடுதான்
உன் ஆண்மைக்குள் என் ராகம் தான்

சின்ன சின்ன உன் முத்தத்தாலே
என் கன்னங்கள் சிவக்கும்
கண்கள் மூடி நான் சரிகையில்
உன் கைகளும் தாங்கும்

ஏழு ஜென்மம் உன்னுடன் வாழவே
உயில் எழுதி இன்றே தருகிறேன்

65.புன்னகை மொழி

ஏனென்று நானே என்னைக் கேட்டேன்
பதிலே தெரியவில்லை
தேனென்று தானே உன்னைத் தொட்டேன்
விலகிட வழியுமில்லை

வானுக்கு எந்தன் வண்ணம் தருவேன்
கவிதை வரியாலே
பூவுக்கு எந்தன் வாசம் தருவேன்
புன்னகை மொழியாலே

நான் இப்படி மாறிப் போவேன்
என கனவில் கூட நினைத்திலேன்
ஏன் மரத்தடி நிழலாய் மாறினேன்
என் இப்போதும் நான் அறிந்திலேன்

காதலென்றால் சாபம் என்று
யார் தந்தது வரமாய் இன்று
எண்ணிப் பார்த்தால் எனக்குள் ஒன்று
எந்தன் பேச்சை மறுத்தே சென்று

போடுது போடுது ஆட்டம்
எல்லாம் காதல் செய்த மாற்றம்
தேடுது தேடுது நெஞ்சம்
நீயேன் எனக்கு செய்தாய் வஞ்சம்

64.துளியாய் விழு

கனவெல்லாம் நீயாய் மாறி
கொன்றாய் என்னை
நினவெல்லாம் நீயாய் மாறி
தின்றாய் என்னை

வாவென்று சொல்லிய போது
மறுக்காமல் வந்தாயே
தாவென்று சொல்லிய பின்னும்
தயங்கித்தான் நின்றாயே

ஒரு வார்த்தையில் என்னுயிரில்
தீயை வைக்கிறாய்
ஒரு பார்வையில் எனக்குள்ளே
துளியாய் விழுகிறாய்

நட்பிங்கே காதலாய் மாறும்
கதைகள் கேட்டோமோ
காதலிங்கே நட்பாய் மாறும்
விசித்திரம் சொன்னாயே

நட்பென்றால் நிறைவேறாத
காதல் என்பதுதான்
காதலென்றால் வாழ்க்கை முழுதும்
தொடரும் நட்பேதான்

இரண்டுமே இங்கு வேண்டுமே
இதயமே பொங்கி அரற்றுமே
என்ன சொல்லியும் சிறு குழந்தையாய்
நான் புரண்டே அழுதேன்..

இதுவரைக்கும் பேசிய வார்த்தைகள்
இதயத்தில் சேமித்தேன்
இனிமேல் நீ பேசும் வார்த்கைள்
எங்கே சேகரிப்பேன்?

இதயமே இல்லா உனக்காய்
கண்ணீர் சிந்துகிறேன்
இரண்டிதயம் படைத்திருந்தால்
ஒன்றை உனக்கே தந்திருப்பேன்

இரு இதயத்தால் வந்த தொல்லையா?
உன் இதயத்தில் காதல் இல்லையா?

நான் துடிப்பதும்
பின்பு வெடிப்பதும்
இங்கு உன்னால் தானே

Friday, July 9, 2010

63.ஆயுள் வரை


அழகே அறிவே அன்பே அகிலே
என்னைத் துளைத்துப் போனாயடா..
மழையே பிறையே நதியே கடலே
என்னை நனைக்க வந்தாயடா..

ஏனோ உன் மௌனம் மட்டும்
கரையை அரிக்குதடா
மனம் நுரையாய் பறக்குதடா

ஏதோ ஒரு ஈர்ப்பில் எந்தன்
உயிரும் திரிகிறதே
நினைவும் சரிகிறதே
இன்னும் என் செய்வாய்?

அலையும் இழுத்துச் சென்றதன் பின்னே
மூழ்கி முத்தெனெ எடுப்பாயா?
வலையும் இல்லை மூடியும் இல்லை
காற்றைத் தடுப்பாயா?

உனக்குள்ளே வசீகரம் ஏதோ இருக்கு
எனக்குள்ளே அது வந்து செய்யும் கிறுக்கு
வெண்ணிலவின் ஒளியில் புன்னகை செய்து
வெடுக்கென நெஞ்சில் கலகம் செய்து
பார்த்துக் கொண்டே இருக்கும் போதே
பார்வை பறித்தாயே
வேர்த்து நானும் கிடக்கும் போது
தாகம் தீர்த்தாயே
எதைத் தருவேன்? எதைத் தருவேன்?
உனக்கென பரிசாய் எதைத் தருவேன்?
என்னைத் தருவேன் என்னைத் தருவேன்
ஆயுள் வரை எந்தன் அன்பைத் தருவேன்..

62.வாழ்வே நீ

உன்னைக் கண்டாலே என் நெஞ்சம் திண்டாடுதே
சொந்தம் கொண்டாட என் ஜீவன் மன்றாடுதே
மழை வரும் போதெல்லாம் நீ வர வேண்டுமே
என் கெஞ்சும் என் கெஞ்சல் 

உனை பதம் பார்க்குமே
தினம் இதம் சேர்க்குமே

என் கூந்தல் வாசம் உன் மீசை தீண்ட
நாட்கள் மாதம் வருடம் என் நீள்கின்றதே
நான் கொண்ட நேசம் என் ஆயுள் தீண்டி
உந்தன் ஜீவன் தாங்கி தானும் உலகாளுமே
கண்ணே நானிருந்தேன் கானல் நீராக
அன்பே நீ வந்தாய் என்னுள் வேராக
வாழும் நொடி தோறும் 

நானுந்தன் நிழலாகவே
வந்தேன் நிஜமாகவே

உன்னோடு நானும் என்னோடு நீயும்
கைகள் கோர்க்கும் நாளில் எந்தன் காயம் ஆறும்
இரவாக வந்து நிலவாக நின்று
ஒட்டிக் கொண்டு நின்றால் எந்தன் தாகம் தீரும்
அன்பே நீ அறிவாய் என் வாழ்வே நீயென்று
அதனால் தேவையில்லை தனியே ஒளியென்று

நீ முகம் சோர்ந்தால் 

என் நெஞ்சம் தாங்காதடா
நேசம் தீராதடா.

Thursday, July 8, 2010

61.என் ஆசை

நீ காதல் சொன்னால்
என் ஆயுள் கூடி விடும்
நீ மௌனம் சொன்னால்
எனை மரணம் தேடி வரும்
உன் பார்வை பட்டால்
எனை நாணம் மூடி விடும்
உன் கைகள் தொட்டால்
என் உயிரில் பூ வெடிக்கும்

உன் அருகில் நடந்தால்
என் நிழலுக்கும் உயிர் பிறக்கும்
உன் வார்த்தை தந்தால்
என் நினைவில் மழை பிறக்கும்
நீ கவிதை சொன்னால்
என் நேரம் தவமிருக்கும்
நீ சிரித்து கொண்டால்
என் காயம் மறைந்திருக்கும்

என் இரவு தோறும்
உன் உறவில் பலமாகும்
என் கனவு தோறும்
உன் வருகையில் அழகாகும்
என் விடியல் தோறும்
உன் மடியில் உருவாகும்
என் விழிகள் தோறும்
உன் முத்தத்தில் ஒளியாகும்

உன் இமைகள் தவித்தால்
என்ன் இதயம் தவிடாகும்
உன் இளமை பசித்தால்
என் இளமை உணவாகும்
உன் ஆசை எல்லாம்
என் ஆசை என்றாகும்
உன் தேவை எல்லாம்
என் தேவை எனமாறும்

Friday, July 2, 2010

60.என் வானம் உனக்காக

என் இரவுகள் உறக்கம் தொலைத்ததடா 
உனக்கேன் புரியவில்லை..
உன் பிம்பம் நெஞ்சில் நிலைத்ததடா 
மீண்டெழ வழியுமில்லை.. 

என் கனவுகள் உன்னை அழைக்குதடா 
நீயதை அறிவாயா? 
என் கவிதைகள் உன்னால் பிழைக்குதடா 
உனக்கது தெரியாதா?

என் மனம் உன்னைத்தான் 
சுற்றியே வருதே தினமே..
உன் குணம் என்னைத்தான் 
மயக்கியே செல்லுதே கணமே..

உன் வனம் எனக்காகும் 
நாளையே எண்ணி சிலிர்ப்பேன்..
என் வானம் உனக்காக 
இருக்குதே வந்தால் துளிர்ப்பேன்..

ஒவ்வொரு நாளிலும் உன் பெயர் எழுதுவேன் 
ஒவ்வொரு முறையுமே புது கவிதைகள் தந்து செல்லுதே... 
ஒவ்வொரு வேரிலும் உனக்கென பூக்கிறேன்..
ஒவ்வொரு பூவுமே உன் வாசம் தந்து கொல்லுதே.. 

உன் குரல்  கேட்காமல் 
உறங்குமா எந்தன் நெஞ்சம்..
உன் விரல் தீண்டாமல் 
புலம்புதே எந்தன் மஞ்சம்..

உன் விழி பார்க்கையில் 
உயிருக்குள் எழுமொரு அலையே 
உன்னை நான் நினைக்கையில் 
நனைக்கவே வருதே மழையே 

உன்னிடம் என்னவோ எனக்குதான் பிடிக்குதே 
உண்மை நான் சொல்கிறேன் இதற்கும் நீ சிரிப்பாய்? 
உன்னையே கேட்டுத்தான் இதயமும் துடிக்குதே 
உள்ளதை சொல்கிறேன் இப்போதும் புன்சிரிப்பா?