Saturday, July 17, 2010

70.ஐந்திணை


கைக்கிளையா? பெருந்திணையா?
இரண்டும் இல்லா ஐந்திணையே..
ஐந்திணையா அதில் எத்திணையோ?

கடலும் கடலைச் சார்ந்த இடமும்
நெய்தல் என்று தெரியாதவனா?
தெரிந்தும் எதற்கிந்த
கேள்விகள் கண்ணா..?
புரிந்தும் புரியா
நடிப்பெல்லாம் ஏனோ?
ஏனோ? ஏனோ?

முன் ஜென்மத்தில் ஒரு மீனவப்
பெண்ணாய் நானும் வந்து பிறந்திருந்தேன்
ஒரு அலை வந்து என்னைக் கடத்திட
படகில் நீதான் கரை சேர்த்தாய்
அன்றுடன் உன்னில் நான்
கலந்துவிட்டேன்
இரவெல்லாம் கனவினில்
திளைத்திருந்தேன்
ஒருநாள் மரணம் எனைத் தீண்டவே

பிரிந்து விட்டேன் பிரிந்து விட்டேன்
என்று நீயும் நினைத்திருந்தாய்
பிறந்து விட்டேன் பிறந்து விட்டேன்
நீயேன் நம்ப மறுக்கின்றாய்?

வயலும் வயலைச் சார்ந்த இடமும்
மருதம் என்று தெரியாதவனா?
தெரிந்தும் எதற்கிந்த
தனிமை அன்பே..
துணிந்து வந்தென்னை
கரம்பிடி இன்றே..
இன்றே இன்றே..

முன் ஜென்மத்தில் மருதத் தலைவனின்
மகளாய் நானும் பிறந்திருந்தேன்
ஒரு அறுவடை நிகழ்ந்த நாளொன்றில்
கருக்கருவால் பட்டு நான் துடித்தேன்
மனதில் உனைத் தாங்கி நான் சரிய
மடியில் என்னை நீயேந்திக் கொண்டாய்
இருந்தும் கண் மூடினேன்..

இறந்து விட்டேன் இறந்து விட்டேன்
என்று நீயும் நினைத்திருந்தாய்..
இணைந்திடவே பிறந்து விட்டேன்
அதையேன் நம்ப மறுக்கின்றாய்.?

காடும் காட்டைச் சார்ந்த இடமும்
முல்லை என்று தெரியாதவனா?
தெரிந்தும் எதற்கிந்த
மௌனம் அழகே.?
மௌனம் விட்டு
மொழி சொல்லு அழகே..
அழகே அழகே..

முன் ஜென்மத்தில் இந்த காட்டினுள் ஒரு
முல்லைக் கொடியாய் பூத்திருந்தேன்..
ஒரு மரமென நீ அணைத்திட்டாய்
உன்மேல் நானும் படர்ந்திருந்தேன்..
விறகு வெட்டி உனை வெட்ட
என் உடலால் நானும் தடுத்து
சோர்ந்தே நான் சரிந்தேனே..

மரித்துவிட்டேன் மரித்துவிட்டேன்
என்றே நீயும் நினைத்திருந்தாய்
மலர்ந்து விட்டேன் மலர்ந்து விட்டேன்
அதையேன் நம்ப மறுக்கின்றாய்?

மணலும் மணலைச் சார்ந்த இடமும்
பாலை என்று அறியாதவனா?
அறிந்தும் எதற்கிந்த
ஆணவம் பொடியா?
அழிந்து போகுமுன்
ஆதரி பொடியா..
பொடியா பொடியா..

முன் ஜென்மத்தில் பாலை வெளியினில்
தனியாய் வந்து மாட்டிக் கொண்டேன்
தண்ணீருக்கு நானேங்கியே
கண்கள் சொருகி விழுந்துவிட்டேன்..
வழியில் பார்த்தே நீ பதறிவிட்டாய்
கண்ணீர் கொண்டென்னை அணைத்துக் கொண்டாய்
இருந்தும் உயிர் நீங்கினேன்..

புதைந்து விட்டேன் புதைந்து விட்டேன்
என்றே நீயும் நினைத்திருந்தாய்
புலர்ந்து விட்டேன் புலர்ந்து விட்டேன்
அதையேன் நம்ப மறுக்கின்றாய்?

நிலமும் நிலத்தைச் சார்ந்த இடமும்
குறிஞ்சி என்று அறியாதவனா?
அறிந்தும் எதற்திந்த
தாமதம் நெஞ்சே..
புரிந்தும் ஏனிந்த
போர்க்களம் நெஞ்சே..
நெஞ்சே நெஞ்சே..

இந்த ஜென்மத்தில் உன்னை அடைந்திடும்
வரத்தை நானும் வாங்கி வந்தேன்..
என் தேடலில் நீ கிடைத்திட்டாய்
என் காயம் கவலை மறந்துவிட்டேன்..
இனிமேல் உனை நான் பிரிந்திருக்க
ஒருநொடி என்னால் முடியாதே..
காதலே நீ தீண்ட வா..

அடைந்து விட்டேன் அடைந்துவிட்டேன்
என் ஆசைகள் உன்னால் அடைந்துவிட்டேன்
கரைந்திருப்பேன் கரைந்திருப்பேன்
உன் காதலில் என்றும் கலந்திருப்பேன்

No comments:

Post a Comment