Monday, December 28, 2009

22. வந்து விடு

நீயில்லாத உலகினில்
நான் உயிர்த்திருக்க மாட்டேன்..
நீயில்லாத உறவொன்றை
நான் நினைக்கவும் மாட்டேன்..

உனக்குள்ளே ஓடியாடி
விளையாட வேண்டும்..
எது சொன்ன போதும்
தலையாட்ட வேண்டும்..

எந்த பாட்டு கேட்ட போதும்
உந்தன் நினைவே நெஞ்சில் மோதும்..
என்ன வேலை செய்த போதும்
உன் குரல் மட்டும் எனக்குள் கேட்கும்..


உன் சிரிப்பு போதும் என் இதழ்கள் மலர..
உன் அணைப்பு போதும் என் ஜீவன் புலர..

வந்து விடு நெஞ்சே நேரம் கடத்தாமல்..
தந்து விடு உயிரே என்னை படுத்தாமல்..

21.நான்.. நீ

நீ வாசகன்
நான் புத்தகம்
நீ வாசிக்க வாசிக்க
இன்னுமாய் செறிவடைகிறேன்..

நீ வல்லினம்
நான் மெல்லினம்
வன்மையும் மென்மையும் இல்லாமல்
இடையினமாய் நீடிக்கிறது இந்த உறவு..

நீ தோப்பு
நான் தனிமரம்
நான் என்னாவேன்
நீயே சொல்..

நீ இமை
நான் விழி
தழுவாத நேரங்களில்
அழுதழுது துடிக்கிறேன்..

நீ இதயம்
நான் துடிப்பு..
நான் துடிப்பதால்தான்
நீ உணரப்படுகிறாயா?
நீ இருப்பதால் தான்
துடிக்கிறேன் நான்..


நீ சிறிய முள்
நான் பெரிய முள்
உன்னை நிமிடத்திற்கொருமுறை
சுற்றி வருகிறேன்..

Sunday, December 27, 2009

20.பொய் சொல்வேனா?

உன் தோள் சாய்ந்து பயணிக்க ஆசையில்லை..
உன் சுவாசக் காற்றில் இளைப்பாறும் மோகமில்லை..

உன் ஸ்பரிசம் பட்டு பூரிக்கும் எண்ணமில்லை..
உன் தலைகோதி மடிமீதிட விரும்பவில்லை..

என்ற பொய்யைச் சொல்வேனா?
இதனை மெய்யென அறியாயோ?

உன் எச்சில் உண்டு நான் களிப்பேன்..
உன்னை பிச்சு பிச்சு நான் தின்பேன்..

நீ உறங்கிய பின்னே துயில் கொள்வேன்..
நீ எழுப்பிய பின்னே துயில் களைவேன்

என்றும் மெய்யைச் சொல்வேனா?
இதனை தானாய் உணராயோ ?

உன் நிழலுக்குள்  நான் வசிப்பேன்..
என் சோகம் மெல்ல வடிந்து விடும்...

என் நித்திரைக்குள் உன்னை வைப்பேன்..
என் கிழக்கும் மெல்ல விடிந்து விடும்..

19.நீ.. நான் ..


நீ நீர் ..
நான் நெருப்பு ..
நெருப்பு நீராகி
நீர் பற்றியது..

நீ பசி
நான் இரை
இரை தின்று தீர்க்கிறது
பசியை


நீ இரவு
நான் நிலவு
நிலவென்னை ஒளியுணரச்
செய்தாய்..

நீ கவிதை
நான் கற்பனை
என்னை எண்ணுகையில்
உன் கவிதைக்குள்
ஒளிந்து கொள்வேன்..

நீ மொழி
நான் மௌனம்
உன் மொழியை விட
உரத்து பேசுகிறது
என் மௌனம்..

நீ காற்றாட்டு வெள்ளம்
நான் நாணல்
அடித்துச் செல்லவோ
அரித்துப் போகவோ இயலாது..
அனைத்துச் செல்வதை தவிர..

Thursday, December 24, 2009

18.சொல் மனமே

உன்னை விட எதுவும் புதிதில்லை..
நீ தொடும் எதுவும் பழுதில்லை..

இதைப்போல் கனவொன்றும் கண்டதில்லை
உனைப் போல எனை யாரும் வென்றதில்லை..

நீ கரும்பென இருப்பது உன் தவறா?
நான் எறும்பென ஊர்வது என் தவறா??

உன்னோடு மட்டும் எல்லை மீறுவேன்..
உன் கண்ணில் எனை ஊற்றி தீருவேன்..

எனக்காக விழித்திருந்த
என் இமையே நீயுறங்கு..

எனக்காக பேசி ஓய்ந்த
என் இதழே நீயுறங்கு..

ஒளி எப்போதும் ஒளிதான்
உன் விழி போதும் -அது
சொல்லும் பல மொழிதான்

நீ ஒளிவீசினால் என் தேகம் தாங்குமோ
உன் விழி பார்த்தால் என் தாகம் நீங்குமோ?

உன்னோடு பேசத்தானே நெருங்கி வருகிறேன்..
என் மறுதலித்து என் நெஞ்சை நொறுங்க செய்கிறாய்? 

சொல் மனமே சொல்..
நீ நினைப்பதெல்லாம் சொல்..

17. கட்டளை

சொல் சொல் என்னிடம் சொல்
உனக்கும் என்னை பிடிக்கிறதா?

செல் செல் உன்னிடம் செல்
என்றே கவிதை அனுப்புகிறேன்..

நில் நில் எனக்குள்ளே நில்
என்றே கட்டளை செய்கின்றேன்..

பெய் பெய் மழையே பெய் 
எனக்கும் அவனுக்கும் இடையே பெய்..

வை வை இதயத்தில் வை
உனக்கென கிடைத்த ஒரு பூவை..

செய் செய் சொல்வதை செய்
மறுதலிக்காமல் யாவும் செய்..

16. நீ அவசியமே..


அந்தி மலரின் மனம் கொண்டவனே
அதிகாலை நிலவின் ஒளி கொண்டவனே..

என் இரவுகள் விழித்திருக்கும் உனக்காக
என் இதயம் விரித்திருப்பேன் உனக்காக

ஏன் விழிக்குள் வந்து வேர் விட்டாய்?
ஏன் மடியில் ஒளிந்து தேர் விட்டாய்?

ஏன் என்னை இரவில் தொடர்கிறாய்?
நீயே வந்து என்னில் படர்கிறாய்?

தப்பித்துப் போனவனே மீண்டும்
ஏன் சிறைபட வந்தாய்?

ஒப்பித்துச் சொன்னவனே மீண்டும்
ஏன் கரைதொட வந்தாய்?

எனக்கென கிடைத்த அதிசயமே..
நான் ஜீவிக்க நீ அவசியமே..

15. தோள் சாய

நீ நான் காணும் அழகிலேல்லாம் அழகு..
என் மேகமே என்னில் துளியாகி விலகு..

என் செய்ய என் செய்ய
எல்லாம் உன்னில் பிடிக்கிறதே..

தோள் சாய தோள் சாய
என் மனம் ஏங்கித் தவிக்குதே..


அவ்வளவு தாகம் உள்ளே இருக்கு
அனைத்திற்கும் காரணம் உன்மேல் கிறுக்கு

என் வேகம் குறைத்து சீராக்கினாய்
உள் நெருப்பை மறைத்து நீராக்கினாய்..

தயங்கி தயங்கி தள்ளிப் போகிறாய்..
மயங்கி மயங்கி மடி சாய்கிறேன்..

என் உயிரின் இன்னொரு சுவாசமே..
என் அணுக்கள் ஒவ்வொன்றும் உனையே பேசுமே..

பனித்துளி பட்டே பற்றி எரிகிறேன்..
மணித்துளி மொத்தம் உனக்கு தருகிறேன்..

காத்திருக்கிறேன் உன் அணைப்பில் உறங்க..
பூத்திருக்கிறேன் உன் விழியில் கிறங்க..

Friday, December 18, 2009

14.உறங்கா விழி

என்ன செய்கிறாய்? என் நினைவே
உன் மனம் தொட வில்லையா என் குரலே?

உன் நினைவுகளில் நான் மூழ்கியிருக்கிறேன்..
உன் கவனம் இரவல் தர மறுப்பதேன்?

உன் வேலையில் என் வரவு தடங்கலா?
உன் கவனத்தில் என் உறவு இடைஞ்சலா?

உன் விழிக்குள் துயில் நுழைந்ததோ?
அதன் விளைவால் பதில் வராமல் நின்றதோ?

உறங்கா  விழிகளுடன் உன்னருகில் நானிருக்க
தூக்கத்தை துணைக்கழைத்து எங்குதான் சென்றாயோ?

நீ பதிலோடு நடை பயின்றாய்..
நான் கேள்வியோடு எடையிழந்தேன்..

இரவில் செறிவு வருவது உன்னால்..
இரு தனிமம் சேர்மமாவது என்னாள்?

13.புதுமையின் அசல்

என் எழுத்தின் அகரம் நீ..
அதில் ஓடும் உதிரம் நான்..
என் புதுமையின் அசல் நீ.
அதில் வரும் புகழின் நகல் நான்..

ஊனை உருக்கும் உந்தன் பார்வை..
தேனை பேருக்கும் உந்தன் வார்த்தை..

உன் ஒற்றை வார்த்தைக்குள் இருக்கிறது ரசம்..
அது இன்னும் இன்னும் இழுக்கிறது உன் வசம்..

நாம் இருவரும் பேசிக் மொள்ளும் நேரம்
என் நெஞ்சம் விட்டு ஓடுதே பாரம்..

நீ வாய்விட்டுச் சிரிக்கும் போது
என் நோய் விட்டுப் போகும் பாரு..

உந்தன் குரல் என்னசைவைக் கெடுக்கும்..
எந்தன் குரல் என்னிசைவைக் கொடுக்கும்..

நெஞ்சுக்குள்ளே உன் நினைவு மோதும்..
நேரில் வந்து பார்க்கச் சொன்னால் ஓடும்..

உன்னைப் பிச்சுப் பிச்சு தின்னுவேன்
உன் அச்சம் அத்தனையும் கொல்லுவேன்..

நீ வருவாயென காத்திருந்தேன்
நடுநிசி கடந்தும் வேர்த்திருந்தேன்..

12.இடம் கொடு

என்னவனே அட என்னவனே
என் விழிகளில் கோலமிட்டாய்..
ஒரு நொடி நான் நிதானிக்குமுன்
என் மனதுக்குள் தாளமிட்டாய்...

என் நேரம் மொத்தமும் நீயே நிரம்பியிருக்கிறாய்..
உன் நேரம் கொஞ்சம் இரவல் தர மறுக்கிறாய்..

எங்கே போனாய் நெடுந்தூரமாய்..
உனக்காய் காத்திருக்கேன் வெகுநேரமாய்..

இடம் கொடு  இடம் கொடு உயிரில்..
வழி விடு வழி விடு உணர்வில்..

போராட்டம் போராட்டம் மனதோடு..
தேரோட்டம் தேரோட்டம் நினைவோடு..

அழைக்கிறேன் அருகே வா..
பிழைக்கிறேன் உறவே வா..

நீ எதுவும் செய்ய தடை இல்லை...
நீ எது சொன்ன போதும் பிழை இல்லை...

எனக்குள் வருவாயா? எனையே தருவாயா?

Monday, December 14, 2009

11.ஒரு வகை போதை

இந்த இரவு அந்த நிலவு
இங்கு நான் அங்கு நீ
இயற்கையும் இதயமும்
இயல்பாய் இணையும் நேரமிது..
ஒரு வகை போதை இது..

உன் மணம் முழுதாய் அறிந்ததில்லை..
உன் மணமின்றி என் எழுத்து பிறப்பதில்லை..

இந்த  இரவினில் புதுமையில்லை..
உன் வரவின்றி எதுவுமில்லை..
 
முல்லை வரப்பினில் நின்றிருப்பேன்..
என் நேசத்தை வென்றெடுப்பேன்..

என் இரவுகள் ஒளிரச் செய்தாய்..
என் பெண்மை மலரச் செய்தாய்..

இறந்தேன் என்னை உயிராக்கினாய்..
பிறந்தேன் என்னில் உயிராகினாய்..

10.இரவோடும் பகலோடும்

எங்கேனும் உன் பேரைக் கேட்டாலே
என் ஜீவன் துள்ளுது தன்னாலே..

புது புது கவிதைகள் படைக்கச் செய்தாய்..
புதிதாய் தினம் என்னை பிறக்கச் செய்தாய்..

இரவோடும் பகலோடும் என்னைக் கொன்றாய்..
இமையோடும் இதழோடும் என்னைத் தின்றாய்..

அடங்காத பெண்ணாக சுற்றி வந்தேன்-நீ எதிர்ப்பட
தடுமாறி உன் கரம் பற்றி நின்றேன்..

நீ அடைகாக்கும் தருணத்திற்காய் காத்திருப்பேன்..
என் ஆசைகளை ஒவ்வொன்றாய் வார்த்திருப்பேன்..

என் கண்ணீர் துளிகள் விரல் தேடி வழிகின்றன...
என் கனவுப்பூக்கள் உன் குரல் கேட்டு விரிகின்றன...

உன் சிரிப்பினில் என் சோகம் மறந்திருப்பேன்..
உன் வருகைக்கு புது கீதம் இசைத்திருப்பேன்..

உன்னை ஒருநொடி கூட தொலைக்க மாட்டேன்-அது
நிகழ்ந்தால் மறுநொடி மண்ணில் நிலைக்கமாட்டேன்..

9.சந்தோசம்

நீயில்லாமல் நானிங்கு வாடினேன்..
உன்னை அங்கங்கு கண் கொண்டு தேடினேன்...

உன்னோடு பேசிடவே ஏங்கினேன்..
உள்மூச்சில் உன்னை வைத்து தூங்கினேன்..

உன் தோளில் சாய்ந்து கொண்டு செல்லுவேன்..
என் சோகம் அத்தனையும் வெல்லுவேன்..

நீயுரங்க தாலாட்டு பாடுவேன்..
உன் தலைகோதி  என் வாசம் தேடுவேன்..

உன் சந்தோசம் ஒன்றேதான் எண்ணுவேன்..
என் சந்தோசம் அதுவொன்றே உணர்த்துவேன்..

8.நான் உன் வாசகி

நான் உன் வாசகி
என்னில் வா சுகி..
நான் உன் தேவியே
நீ என் தேவையே..

இன்னும் சொல்லுவேன்
உன் கன்னம் கிள்ளுவேன்
நெஞ்சில் அள்ளுவேன்-உயிர்
நேசித்தே கொல்லுவேன்..

உன் பார்வை என்னில் மேயும்...
தாக வேர்வை ஆறாய் பாயும்..
உன் மோகம் கொஞ்சம் ஓயும்...
என் தேகம் மெல்லத் தேயும்..

என் காதில் காதல் பாடு..
உன் இதழால் இதழை மூடு..
என் உயிரில் உயிரைத் தேடு...
உன் பிரிவில் மரணம் ஈடு..

7.ஒருமுறை..

ஒருமுறை ஒருமுறை போதும் - என்
தலைமுறை வரைக்கும் தொடரும்..
மறுமுறை மறுமுறை கேட்டால் - சில
வரைமுறை கடந்திட தொடரும்..

சொல்லிவிட வா..
சொல்லி விட வா..

என் காதும் உனக்கு கருவறை..
உன் குரலைச் சுமக்கும் பலமுறை..
என் கனவும் உனக்கு கருவறை..
உன் வரவைச் சுமக்கும் பலமுறை...

மென் இதயம் தந்தேன் போய்விடு..
கீழ் இமைகளில் கொஞ்சம் ஓய்வெடு..
என் விதையில் மழையாய் தூறிடு..
புது வித்தைகள் கற்றுத் தேறிடு..

6.உன் குரல் போதும்..

கண்ணே என் கண்ணே
உன் குரல் போதும்..
உயிரின் அணுவும் அதிரும்..

அன்பே என் அன்பே
நீ அருகிருந்தால்
எனது பூமி சுழலும்..

வானம் அது நம் வீடு..
வாழ்வோம் இரு சிறகோடு...
நிலவில் ஒரு திரை போடு- இந்த
உறவில் இனி பிரிவேது..

புத்தம் புது பூக்கள் மலரும்
நித்தம் அது பூமியில் உலரும்..
முத்தமொன்று மேனியில் படரும்..
சத்தமின்றி உயிரணு மலரும்..

5.பிறைநிலா தேய்வதில்லை


வெள்ளை இரவே
பிள்ளை உறவே
கொள்ளை போனது
எந்தன் மனதே

பச்சை நிலவே
இச்சை கிளியே
பிச்சை புகினும்
காதல் சிறப்பே..

எழுதப்படா கவிதை நான்
உழப்படா நிலம் நான்-அன்பே
கலப்படம் ஏதுமில்லை -அதனால்
நிழற்படம் தேவை இல்லை...

சிறகில்லா பறவை நான்
உறவில்லா பாவை நான்-அன்பே
குறைகள் ஏதுமில்லை - இந்த
பிறைநிலா தேய்வதில்லை...

4.உன்னால் முடியாதா


முடியாதா உன்னால் முடியாதா
விடியாதா இரவு விடியாதா
யார் சொன்னது? -உனக்கும்
வேர் உள்ளது
வா வா வா
வாழ்வை வாழ்வாய் வாழ்வோம்...

முட்டி மோது முயற்சிகள் செய்..
நெட்டித் தள்ளு..
விட்டில் அல்ல விளக்கில் சாக
விண்மீன் நீயே..

வெற்றி கிடைக்கும் வரை
உறவுகள் சொல்லும் வீண் முயற்சி..
வெற்றி கிடைத்த போது..
உலகமே சொல்லும் விடாமுயற்சி..

இயங்கு இயங்கு இதயமாய்...
இமயத்தை விடவும் உயரமாய்..

3.என் ஆயுளின் அந்திவரை

என் ஆயுளின் அந்திவரை
அன்பின் அடைமழையாய்
வருவாயா...?

என் வேரினை நனைத்திடவே..
உன் கடைசி மழைத்துளியைத்
தருவாயா..?

நெடுந்தூரப் பயணம் போய் வரலாம்..
நெடுங்கதை பேசி மனம் ஆறலாம்..
தொடர் வண்டி தடதடக்கும்..
மலைச்சாரல் சிலுசிலுக்கும்..

பேசாத கதைகள் பேசிடலாம்..
ஓயாத அலையாய் வீசிடலாம்..

நிலக்கடலை கொறித்து நடைபோடலாம்..
நிலம் பதிக்கும் பாதத்தை எடைபோடலாம்..
மழை வந்து தொணதொணக்கும்..
மரக்கிளையும் முணுமுணுக்கும்..

ஊடலில் உன்னைக் கிடத்திடுவேன்..
கூடலில் என்னை படுத்திடுவாய்...

2.வித்தகரே வித்தகியே

வித்தகரே வித்தகரே
வித்தை கற்றுத் தர தயக்கமென்ன...
உத்தமரே உத்தமரே
என்னை ஏற்றுக் கொள்ள கலக்கமென்ன..

உன்னில் என்னைக்
காணும் நேரமிது..
என்னில் உன்னை
காணும் நேரமெது?..

விபரங்கள் தெரியவில்லை இதில்
விரசங்கள் ஏதுமில்லை

பூவுமொன்று தேடி வர
வண்டுக்கென்ன ரோசமிங்கு?
தீவைப் போல தனித்திருந்தால்
தீர்ந்திடுமா ஊடலிங்கு?

சாயம் போகா வானவில்தான்
காயம் பட்டுத் துடிக்கிறதே ..
நீயுமிங்கு விலகி நின்றால்

காய்ச்சல் விட்டு அடிக்கிறதே..

உன்னை நெஞ்சில் எண்ணித்தான்
உண்மை எல்லாம் சொல்லினேன்...
உளறிக் கொட்டி விட்டேன்
போய் வரவா...

1.ஒற்றை சிறகு

ஒற்றை சிறகு..
ஒற்றைச் சிறகாய்...ஒற்றைச் சிறகாய்..
காற்றில் பறந்தேன்..
கைப்பிடித்தாய்...

ஒற்றை வரியாய் ஒற்றை வரியாய்
ஏட்டில் இருந்தேன்..
நீ படித்தாய்..

உன் பெயரை சொன்னாலே
உயிரணுக்கள் சலசலக்கும்...
உன் குரலை கேட்டாலே
உதிரத்தில் அலையடிக்கும்..