Tuesday, February 16, 2010

43. நீ அறிவாயா?


உயிரே உயிரே வருவாயா?
உயிரைத் திருடிக் கொள்வாயா?
உறவாய் வந்தால் உதறிச் செல்வாயா?

இரவே இரவே கரையாதே
இமையின் ஈரம் குறையாதே
இதயத்தின் ஓரம் பனியாய் உறையாதே

அனுதினம் உன்னைப் பார்க்க - உன்
அழகினை அள்ளிப் பருக
நான் படும் அவஸ்தை அதை நீ அறிவாயா?

அதிகாலை உன்னில் விழித்து
அந்திமாலை உனக்குள் விழுந்து
அடங்கும் யோகம் அதை நீ தருவாயா?

என் பாதையெங்கும்
தேன்மழைதான் விழும்போதும்
உந்தன் பிம்பம் ஒவ்வொரு துளியிலும்
அதை நான் ரசிக்கின்றேன்

என் இரவெங்கும்
முழுநிலவே வரும் போதும்
உந்தன் சிரிப்பில் அதுவும் தோற்கும்
அதை நீ மறுக்காதே

பூத்திருக்கும் காதலினை
நான் சொல்லப் போவதில்லை
நீயாக உணர்ந்திட மாட்டாயா?

உன் சொல்லில்தான்
என் உலகம் பிறக்குமடா
விடியல் வருமா? என்றே
என்னுயிர் ஊசலாடுதடா..

உன் தோள் சாய்ந்து
என் பயணம் தொடர்ந்திடுமா?
உயிரும் ஏங்க நீயும் விரும்பி
எதைதான் சொல்வாயோ?

இனிமேலும் சொல்வதற்கு
எனக்கேதும் வார்த்தையில்லை
இதழ் சேர்த்து இதமே தருவாயா?

No comments:

Post a Comment